search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தானியங்கி கதவு"

    விபத்தில் உயிர் பலியை தவிர்க்க, ரெயிலில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கிற்கு, பதில் அளிக்கும்படி ரெயில்வே துறைக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் வக்கீல் கே.சதீஷ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருமால்பூர்-சென்னை கடற்கரை இடையே ஓடும் புறநகர் ரெயிலில் கடந்த 24-ந் தேதி காலையில் படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணம் செய்தனர். இந்த ரெயில், பரங்கிமலை ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த தடுப்புச்சுவரில், படியில் பயணம் செய்த பயணிகள் மோதினர். இதில், 5 பேர் பலியாகியுள்ளனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த விபத்து மிகப்பெரிய அதிர்ச்சியை பொதுமக்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது. சென்னையில், மெட்ரோ ரெயிலும் இயக்கப்படுகிறது. இதில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த ரெயிலில் பயணிகள் ஏறியதும், தானியங்கி கதவும் மூடிவிடுகின்றன. அதன்பின்னரே ரெயில் இயக்கப்படுகிறது.

    அதுபோல, விபத்தில் உயிர் பலியை தவிர்க்க, புறநகர் ரெயில் மட்டுமல்லாமல், அனைத்து ரெயில்களிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என்று கடந்த 24-ந் தேதி இந்திய ரெயில்வே துறையின் அமைச்சர், தெற்கு ரெயில்வேயின் பொதுமேலாளர், தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனுவை அனுப்பினேன். இதுவரை அந்த மனுவை பரிசீலிக்கவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய ரெயில்வே துறை செயலாளர், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற ஆகஸ்டு 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    ×